தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் வார்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக விரோத செயல்கள் – நோயாளிகள் அச்சம்

தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் வார்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக விரோத செயல்கள் – நோயாளிகள் அச்சம்

தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் வார்டுக்குட்பட்ட பாத்திமா நகர் அருகே அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

புல் தோட்டம் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தின் அருகில் உடற்பயிற்சி கூடம் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவையும் அமைந்துள்ளன.

இந்நிலையில், சுகாதார நிலையத்தின் வாயிலில் பாதுகாப்பு கேட் இல்லாத காரணத்தால் சில சமூக விரோதிகள் இரவு நேரங்களில் அங்கு மது அருந்தி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், மது போதையில் சுகாதார நிலையத்தின் கண்ணாடிகளை உடைப்பதும், பணியில் இருக்கும் மருத்துவர் மற்றும் செவிலியர்களை மிரட்டுவதும், மருந்துகள் கேட்டு அச்சுறுத்துவதும் தொடர்ச்சியாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதன் விளைவாக, நோயாளிகள் சிகிச்சைக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதாகவும், அங்கு பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சுகாதார நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், இந்த சுகாதார நிலையம் அருகே அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் இருந்து சுற்றியுள்ள ஆறு வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த குடிநீர் தொட்டிக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், சமூக விரோதிகள் அத்துமீறல் செயல்களில் ஈடுபடும் அபாயம் இருப்பதாக 46வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் புல்டன் ஜெசின் தெரிவித்துள்ளார்.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நுழைவாயில் கேட், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் நோயாளிகளும், பணியாளர்களும் அச்சமின்றி வந்து செல்லக்கூடிய சூழல் உருவாகும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.