தூத்துக்குடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடத்து பணம் திருட்டு: நேபாள கொள்ளையன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

ஆத்தூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருடிய வழக்கில் 11 ஆண்டுகளாக நேபாள கொள்ளையன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள பழைய காயல் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருடப்பட்டது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பழைய காயல் கச்சேரி தெருவில் தற்காலிகமாக வசித்து வந்த நேபாளம் அவபூலாகளம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்தன் மகன் கிரண் (30) என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரை ஆத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவருக்கு கோர்ட்டு பலமுறை வாரண்ட் பிறப்பித்தும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. தொடர்ந்து 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் அவரை தேடப்படும் குற்றவாளியாக தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிபதி அறிவித்தார்.