தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நாளை (ெசவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் ஆக.14-ந் தேதி வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.

முகாமின் தொடக்கமான நாளை தூத்துக்குடி மாநகராட்சி, அழகேசபுரம் பகுதியில் உள்ள ஆனந்த மஹால் திருமண மண்டபத்தில் 21,22 மற்றும் 23-வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம் நடைபெற உள்ளது. அதேநாளில் கோவில்பட்டி நகராட்சியில் சத்தியபாமா திருமண மண்டபத்திலும், ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் யாதவர் மண்டபத்திலும், ஆத்தூர் பேரூராட்சியில் ஆத்தூர் மேலத் தெருவில் உள்ள சண்முகசுந்தர நாடார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியிலும் நடக்கிறது.

தூத்துக்குடி ஒன்றியத்தில் மேலத்தட்டப்பாறை சமூகநலக் கூடத்திலும், கருங்குளம் ஒன்றியத்தில் சிங்கத்தாகுறிச்சியில் உள்ள வி.டி.கே. மஹால் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் ஆக.14-ந் தேதி வரை 108 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் குடிநீர் இணைப்பு, சொத்துவரி, வாரிசு மற்றும் சாதி சான்றிதழ், பட்டா குறித்த சேவைகள், ஆதார், மின் இணைப்பு உள்ளிட்ட அரசு சேவைகள் பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்களில் மட்டுமே வழங்கப்படும். எனவே மகளிர் உரிமைத்தொகை பெறதகுதியுள்ள பெண்கள் முகாம்களில் விண்ணப்பிக்கலாம், அவர் தெரிவித்துள்ளார்.