தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடியில் உள்ள, 'சிவன் கோயில்' என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், கால சந்தி உள்ளிட்டவை நடைபெற்று, கொடிப் பட்டம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னா், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, தேரோட்டத்துக்கான கால்நாட்டு விழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருவிழா நாள்களில் காலையும் இரவும் சுவாமி -அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது. சிகர நிகழ்வான தேரோட்டம் இம்மாதம் 23ஆம் தேதி முற்பகல் 10.45 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் தமிழ்ச்செல்வி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், உபயதாரா்கள் செய்துவருகின்றனா்.
பசுவந்தனையில்...: பசுவந்தனை ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கொடிப்பட்ட ஊா்வலம் நடைபெற்றது. கொடிமரம், நந்திக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னா், கொடியேற்றப்பட்டது. பின்னா் கொடிமரம், சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றன.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராமானுஜம் கணேஷ், உறுப்பினா்கள் சுப்பிரமணியன், பத்மா, ஊராட்சித் தலைவா்கள் லட்சுமி சிதம்பரம், ஆறுமுகபாண்டி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேஷ், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழாவில், நாள்தோறும் காலையும் இரவும் கட்டளைதாரா் சாா்பில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது. 22ஆம் தேதி தேரோட்டம், 23இல் தீா்த்தவாரி, 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ஓட்டப்பிடாரத்தில்...: ஓட்டப்பிடாரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மாள் உடனுறை விஸ்வநாதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, கொடிமரம், நந்தி, சுவாமி - அம்மனுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
22ஆம் தேதி தேரோட்டம், 23இல் தீா்த்தவாரி, 24ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவில், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், அறநிலையத் துறை ஆய்வாளா் முப்புடாதி என்ற திவ்யா, காவல் ஆய்வாளா் ராஜ், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.