சாத்தாண்குளத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத 2 கடைகள் மூடல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!
சாத்தான்குளத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத 2 கடைகளை மூடி உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத 2 கடைகளை மூடி உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 40 கிலோ லேபிள் விபரங்கள் இல்லாத உணவு பொருள்களை பறிமுதல் செய்ததுடன் பாதுகாப்பில்லாமல் வடை வழங்கிய இரு உணவகங்களுக்கு அபராதம் விதித்தனர். சாத்தான்குளம் பகுதியில் உணவு பொருள்கள் கவனக்குறைவாகவும், சுகாதார மில்லாமலும் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் உணவு பாதுகாப்புத் துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி மக்களுக்கு சுகாதார, தரமானு உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், சாத்தான்குளம் - உடன்குடி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) சக்திமுருகன் அடங்கிய குழுவினர் நேற்று (14ஆம்தேதி) திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த இரண்டு உணவகங்களில் வடையை பரிமாறுவதற்கு நியூஸ் பேப்பரைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால், அதனை பறிமுதல் செய்து, தலா ரூ.1000 அபரதம் விதிக்கப்பட்டது.
மேலும், சாத்தான்குளத்தில் ஒரு ஸ்வீட் ஸ்டாலிலும், முதலூரில் உள்ள இரண்டு இனிப்பகங்களிலும் தயாரிப்பு தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்கள் இல்லாத 40 கிலோ பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சாத்தான்குளத்தில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கி வந்த மளிகைக் கடையையும், பழரசக் கடையையும் மூட உத்திரவிடப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது, கொப்பரை நிறுவனம் ஒன்று உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கிவருவது கண்டறியப்பட்டது. மேலும், அந்நிறுவனத்தில், கொப்பரை கெட்டுப்போகாமல் இருக்க, அனுமதியற்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் இயக்கத்தினை நிறுத்தவும் உத்திரவிடப்படவுள்ளது.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று தொழில் புரிய வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இன்னும் பல உணவுத் தொழில் சார்ந்த வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமின்றி தொழில்புரிந்து வருவது தொடர் கதையாக இருப்பது, வணிகர்களின் சட்டத்தின் மீதான அக்கறையின்மையைக் காண்பிப்பதாக கருத ஏதுவாகின்றது. உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத அல்லது காலாவதியான உரிமம் கொண்டுள்ள உணவு வணிகர்கள், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற பின்னரே, உணவு வணிகம் புரிய வேண்டும்.
இயற்கை நீதிக்குட்பட்டு அநேக விழிப்புணர்வுகளும், அறிவிப்புகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது., எந்த உணவு வணிகராவது, உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நிறுவனம் அல்லது கடையை மூடி முத்திரையிடப்படும் என்றும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்2006-ன் பிரிவு 55, 58 மற்றும் 63-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், அனைத்து உணவகங்களும், இனிப்பகங்களும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்திரவின் படி, 9444042322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் புகார் எண்ணை நுகர்வோர் அறியும் வகையில் காட்சிப்படுத்திடல் வேண்டும் என்றும்,
அனைத்து பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. மேலும், நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்களில், வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை பரிமாறக் கூடாது என்றும்,. தவறினால், குறைந்தபட்சம், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும். உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் எவையேனும் அனுமதியற்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துவது ஆய்வில் கண்டறியப்பட்டால், அந்நிறுவனங்கள் உடனடியாக மூடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றார்.