தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ.1,42,131 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ.1,42,131 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

சேவைக் குறைபாடு காரணமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 1,42,131 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தென்காசி மாவட்டம் கீழப்புலியூரைச் சார்ந்த ஆசிரியர் லதா என்பவர் தென்காசியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கி அதில் தன்னுடைய மாத ஊதியம் உட்பட அனைத்து பண வரவினங்களையும் சேமித்து வந்துள்ளார். அதன் பின்னர் வங்கியிடம் ஏடிஎம் கார்டு பெற்று அந்த சேவையையும் பயன்படுத்தி வந்துள்ளார். 

அவருக்கு குழந்தை பிறந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அவருடைய மொபைல் போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது. சிகிச்சை காலத்திற்கு பின் மொபைல் போனை ஆன் செய்த போது நிலுவையில் இருந்த குறுஞ்செய்திகளை வாசித்துள்ளார். அதில் ஏழு முறை ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ள குறுஞ்செய்திகளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

மேலும் வங்கி கணக்கை சரி பார்த்ததில் பெருமளவில் பணம் குறைந்துள்ளது. உடனடியாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டு என் வசம் இருக்கும் போது பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது எனப் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு வங்கி மேலாளர் தங்களது வங்கி மிகவும் பாதுகாக்கப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய சேவையை வழங்கி வருவதாகவும் புகார்தாரர் தவறான புகாரைச் சொல்வதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் மூன்று மாதம் கழித்து மீண்டும் நான்கு முறை பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனடியாக ஏடிஎம் கார்டை செயல் இழக்கச் செய்துள்ளார். இதையடுத்து தென்காசி காவல்நிலையம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். பல நாட்களாகியும் எந்தவிதமான பதிலும் வராததால் வங்கி மேலாளரை அணுகியதற்கு உங்களுக்கு பணம் கிடைக்க பரிந்துரை செய்து அனுப்பியுள்ளளேன் என்ற கடிதத்தை காட்டியுள்ளார். 

அதன் பிறகு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையை அணுகி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவும் பெற்றுள்ளார். போலி ஏடிஎம் கார்டு தயாரிக்கப்பட்டு சைபர் தொழில் நுட்பம் மூலம் பணம் திருடப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. இது குறித்து பேங்கிங் ஆம்புட்ஸ்மேனிடமும் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர் லதா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. 

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் போலி ஏடிஎம் கார்டு மூலம் இழந்த தொகையான ரூபாய் 1,07,131 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூபாய் 25,000; மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 1,42,131 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.