பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.300 கோடி மோசடி: தூத்துக்குடி காவல் நிலையத்தில் நியோ மேக்ஸ் நிறுவனம் மீது புகார்!

பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.300 கோடி மோசடி: தூத்துக்குடி காவல் நிலையத்தில் நியோ மேக்ஸ் நிறுவனம் மீது புகார்!

தூத்துக்குடியில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறி சுமார் ரூ.300 கோடி வரை மோசடி செய்த நியோ மேக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையை சேர்ந்த கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நியோ மேக்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் மோசடியாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்கள் செலுத்தும் பணத்திற்கு அந்தந்த பகுதிகளில் துணை நகரம் உருவாக்கி அதன் வளர்ச்சி மூலம் கிடைக்கும் 8 முதல் 10 மடங்கு லாபத்தில் இரண்டு மடங்கு லாபத்தை முதலீடு செய்பவர்களுக்கும் மேலும் மாதம் ஒரு சதவீதம் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியாகவும் 3 ஆண்டுகளுக்கு பின்பு முதிர்வுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்று பலரிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையால் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் நியோ மேக்ஸ் ஏஜெண்டாக செயல்பட்ட ஜூலி பாய், சுரேஷ் ஆகியோர் தூத்துக்குடி, ,நெல்லை கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் நியோமாக்ஸ் இன் திட்டங்களை மோசடியாக எடுத்துக்கூறி ரூபாய் 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மோசடி நபர் சுரேஷை மட்டும் கைது செய்துள்ளது ஆனால் தூத்துக்குடியை சேர்ந்த ஜுலி பாய் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு இதுவரை கைது செய்யவில்லை மேலும் ஜூலி பாய் ஏற்கனவே தூத்துக்குடி புது தெரு பகுதியில் தான் வாசித்த வீட்டிலிருந்து காலி செய்து மற்றொரு பகுதிக்கு வீட்டை மாற்றி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் நியோ மேக்ஸ் நிறுவனம் மோசடியாக பலரிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வழங்காமல் தற்போது மீண்டும் வேறு தொழில் மூலம் மோசடியில் ஈடுபட துவங்கியுள்ளது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவந்தது. இந்நிலையில் ஜூலி பாயிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த நபர்கள் கடந்த ஆறு மாதங்களாக அவரது வீட்டை தேடி அவரை கண்டுபிடித்து பணத்தை கேட்ட பொழுது அவர் முறையாக பணத்தை தர நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது தன்னை தாக்க வந்ததாக சிப்காட் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார் 

இதைத் தொடர்ந்து நியோ மேக்ஸ் நிறுவனத்தால் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மோசடி நபர் ஆன ஜூலி பாயை பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சிப்காட் காவல் துறையினர் கைது செய்து தங்களது பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். காவல்துறை தங்கள் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க விட்டால் தாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்

தெரிவித்தனர்.