பெண்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் - பொட்டல்காடு பகுதியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..!
எல்லா வகையிலும் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முள்ளக்காடு ஊராட்சிக்குட்பட்ட பொட்டல்காடு கிராமத்தில் நடைபெற்ற இலவச தையல் தொழில் பயிற்சி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
எல்லா வகையிலும் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முள்ளக்காடு ஊராட்சிக்குட்பட்ட பொட்டல்காடு கிராமத்தில் நடைபெற்ற இலவச தையல் தொழில் பயிற்சி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 பிறந்த நாளை முன்னிட்டு முள்ளக்காடு ஊராட்சிக்குட்பட்ட பொட்டல்காடு கிராமத்தில் நடைபெற்ற இலவச தையல் தொழில் பயிற்சி விழாவிற்கு சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் 7 தையல் மிஷின்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் அவர் பேசுகையில்: முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுவான ஒரு பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்ட போது, இந்த ஊரைச் சேர்ந்த சிலர் எங்கள் ஊரில் இதுபோன்ற தையல் பயிற்சி மேற்கொள்வதற்கு தாங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இங்கு 40 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் அனைவருக்கும் சொந்தமாக தையல் மிஷின் மற்றும் அதற்குரிய உபகரணங்களும் வழங்கப்படும்.
முதலமைச்சர் மகளிருக்கென்று சுயஉதவிக்குழு மற்றும் வங்கிக்கடன், தொழில்பயிற்சி என பல சலுகைகள் வழங்கி வருகிறார். இதையெல்லாம் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல் உழைக்க வேண்டும். பல்வேறு தொழில் பயிற்சிகள் உங்களுக்கு கற்றுத் தருவதற்கான வாய்ப்பை உருவாக்கி அதன் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான வழிவகைகளும் செய்யப்பட உள்ளன. அனைத்து பெண்களும் இதில் பங்கெடுத்து பயனடைய வேண்டும். எல்லா வகையிலும் பெண்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக கிளைச் செயலாளர் சந்தனராஜ் வரவேற்புரையாற்றினார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மகளிர் திட்ட அலுவலர் வீர புத்திரன், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபி, பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலர்கள் ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரூபன், வட்ட செயலாளர்கள் முத்துராஜா, பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.