KFC சிக்கன் புகார் எதிரொலி! தூத்துக்குடி உணவு பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு... உணவகம் தொடர் கண்காணிப்பில் வைக்க முடிவு!

KFC சிக்கன் புகார் எதிரொலி! தூத்துக்குடி உணவு பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு... உணவகம் தொடர் கண்காணிப்பில் வைக்க முடிவு!

தூத்துக்குடி தனியார் ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் KFC உணவகத்தில் தரமற்ற சிக்கன் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலான புகாரைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், 29.05.2026 அன்று நடைபெற்ற இந்த ஆய்வில், உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட இறைச்சி, மசாலா பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் தரம் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டது.

மேலும், பொருட்களின் லேபிள் விவரங்கள், காலாவதி தேதி, சேமிப்பு வெப்பநிலை மற்றும் உணவுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்ட விதம் உள்ளிட்ட அம்சங்களும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின் போது, உணவுப் பொருட்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என உணவக நிர்வாகத்திற்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதுடன், அதற்கான குறிப்பாணையும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம் காரணமாக, சம்பந்தப்பட்ட KFC உணவகம் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலான புகாருக்கு பிறகு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது தற்போது தூத்துக்குடியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.