தூத்துக்குடி ஏர்போர்ட்டில் ‘டிராப்’ செய்ய கூட கட்டணமா?..தனியார் டாக்சிகளிடம் ₹50 வசூல்… கனிமொழி எம்பியிடம் இந்திய விமானப் பயணிகள் சங்கம் அதிரடி புகார்!

தூத்துக்குடி ஏர்போர்ட்டில் ‘டிராப்’ செய்ய கூட கட்டணமா?..தனியார் டாக்சிகளிடம் ₹50 வசூல்… கனிமொழி எம்பியிடம் இந்திய விமானப் பயணிகள் சங்கம் அதிரடி புகார்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட வரும் தனியார் டாக்சி வாகனங்களிடமிருந்து முறையற்ற வகையில் ₹50 சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக இந்திய விமானப் பயணிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் சங்கம் அதிகாரப்பூர்வ புகார் மனு அளித்துள்ளது.

இந்திய விமானப் பயணிகள் சங்கத்தின் தலைமைச் செயல் அமைப்பாளர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடி விமான நிலைய வளாகத்திற்குள் பயணிகளை இறக்கிவிடுவதற்கே தனியார் டாக்சிகளிடம் ₹50 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் சொந்தப் பயன்பாட்டு கார்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே விமான நிலைய உள்கட்டமைப்புக்குள் வாகனங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு வேறுபாடு காட்டுவது நீதியற்ற மற்றும் ஒருதலைப்பட்சமான நடைமுறை என சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் அனைத்து வகை வாகனங்களுக்கும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக பயணிகளை இறக்கிவிட அனுமதி வழங்கப்படுவதாகவும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக் குழந்தைகளுடன் பயணிப்போருக்கு 15 நிமிடங்கள் வரை சலுகை வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தூத்துக்குடி விமான நிலையத்திலும் அனைத்து வாகனங்களுக்கும் இலவச ‘டிராப்’ அனுமதி வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நேர வரம்பை 15 நிமிடங்களாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் கனிமொழி எம்பி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய விமானப் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.