வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல் : நாட்டுக்கோழி முட்டையா அல்லது லெக்கான் கோழி முட்டையா? கண்டரிவது எப்படி..?
நமது ஊர் சினிமாக்கள் மூலம் மிகவும் பிரபலமான வசனம், வெள்ளையா இருக்கின்றவன் பொய் சொல்லமாட்டான். இது வசனமாக இருந்தாலும், நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இதனை உண்மையென நினைத்தார்களோ என்னவோ, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக..........
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை செய்தி வடிவில் நாம் வழங்கி வருகிறோம், இன்றைய உணவு பாதுகாப்பு குறித்த தகவலை வாங்க அறிந்து கொள்ளலாம்...
தலைப்பு: முட்டை - பகுதி-3 - நாட்டுக்கோழி முட்டையா அல்லது லெக்கான் கோழி முட்டையா?
நமது ஊர் சினிமாக்கள் மூலம் மிகவும் பிரபலமான வசனம், வெள்ளையா இருக்கின்றவன் பொய் சொல்லமாட்டான். இது வசனமாக இருந்தாலும், நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இதனை உண்மையென நினைத்தார்களோ என்னவோ, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக வெள்ளையர்களுக்கு அடிமையாக இருந்துவிட்டனர்! இவ்வாக்கியத்தின் நோக்கம், நம்மிடையே நிறத்தின் மீதுள்ள அதிகப்படியான ஈர்ப்பினைச் சுட்டிக்காட்ட மட்டுமேயாகும். உடைகளில் வேண்டுமானால் நிறத்தின் மீதான ஈர்ப்பு இருக்கலாம். ஆனால், உணவில் எதற்கு நிறத்தின் மீதான ஈர்ப்பு? ஜிலேபி சிவப்பாக இருக்க வேண்டும், கேசரி சிவப்பாக இருக்க வேண்டும், சிக்கன்-65 சிவப்பாக இருக்க வேண்டும், நாட்டுக்கோழி முட்டை பழுப்பாக (Brown) இருக்க வேண்டும்..!! கண்ணிற்கு பளீச் என்று தெரியும் வண்ணங்கள் சேர்த்த உணவு கண்களின் பசியை வேண்டுமானால் போக்கும்.
ALSO READ... பச்சை முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் !
ஆனால், உண்மை நிலை வேறு. சூப்பர் மார்க்கெட்டில் நாம் வாங்கும் ப்ரவுன் முட்டை யாவும் நாட்டுக்கோழி முட்டையல்ல!! வாரச்சந்தையில் வாங்கும் காஃபி கலர் முட்டை அனைத்துமே நாட்டுக்கோழி முட்டையல்ல..!! ஆக, சிறிய வியாபாரிகளில் ஆரம்பித்து பெரிய நிறுவனங்கள் வரை, நம்மிடையே உள்ள நாட்டுக்கோழி முட்டை மோகத்தினை முதலீடாகக் கொண்டு, முறைகேடாக பொருளீட்ட முயற்சிக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல. ஏனென்றால், சமீப காலங்களில் உணவு பாதுகாப்புத் துறை டீ டிக்காஷனால் நிறமூட்டப்பட்டு, நாட்டுக்கோழி முட்டை என்று மோசடியாக விற்பனை செய்யப்பட்ட முட்டைகளைப் பறிமுதல் செய்து, அழித்துள்ளனர்.
நாட்டுக்கோழி முட்டை, பிரவுன் முட்டை, லெக்கான் கோழி முட்டை மற்றும் அவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்ப்போம்.
# பிரவுன் முட்டை என்பது லெக்கான் கோழிகளின் ஒரு குறிப்பிட்ட இனம் இடும் முட்டைகள் தாம்.
# பிரவுன் நிறத்திற்கு, கோழியின் ஓடு சுரப்பியில் (shell gland) சுரக்கும் ப்ரோட்டோஃபோர்பைரின் என்ற நிறமி தான் காரணமாகும்.
# பிரவுன் மட்டுமல்ல, நீலம், நீல பச்சை நிறத்திலும் கோழி முட்டை உள்ளது.
# நாட்டுக்கோழியின் (அதாவது, கூண்டில் இல்லாமல், சுதந்திரமாக நடமாட அனுமதித்து வளர்க்கப்படும், இந்திய வகைக் கோழி) முட்டை, மங்கலான வெள்ளை நிறத்தில் (வெளீர் பழுப்பு என்று கூட கூறலாம்) தான் இருக்குமே ஒழிய, டீ டிக்காஷன் நிறத்திலோ அல்லது ப்ரவுன் நிறத்திலோ இருக்காது. (எனது சகோதரி தனது வீட்டில் இன்று வரை நாட்டுக்கோழி வளர்த்து வருகின்றார். ஆனால், அக்கோழிகள் இதுநாள்வரை ப்ரவுன் நிறத்தில் முட்டை இட்டதில்லை..!)
# சுற்றுப்புற சூழல், உணவு போன்றவை கோழி முட்டையின் நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
# லெக்கான் கோழியின் ப்ரவுன் முட்டை/வெள்ளை முட்டை, நாட்டுக்கோழியின் முட்டை ஆகியவற்றின் ஊட்டச்சத்து விகிதத்தில் குறிப்பிடும்படியான வித்தியாசம் எதுவும் கண்டறியப்படவில்லை.!!
# முட்டைக் கோழி வருடம் அதிகபட்சம் 320 முட்டைகள் வரை இடும் தன்மை கொண்டவை. ஆனால், நாட்டுக்கோழி வருடத்திற்கு 180 முட்டைகள் இடும் என்பதே சற்று அதிகம் தான். அதனால்தான், நாட்டுக்கோழி முட்டையின் விலை முன்னதைவிட அதிகம். எனவே, சில வியாபாரிகள் லெக்கான் கோழி முட்டையை நாட்டுக்கோழி முட்டை என்று நுகர்வோரை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
# நாட்டுக்கோழி முட்டை என்று கடைகளிலோ/வாரச்சந்தையிலோ அல்லது தெரு வணிகரிடமோ வாங்கி வந்தால், அந்த முட்டைகள் உண்மையாகவே நாட்டுக்கோழி முட்டைதானா என்பதை பரிசோதிக்க, அந்த முட்டைகளை பச்சைத் தண்ணீரில் கழுவிப் பார்த்தாலோ அல்லது ஈரப்பஞ்சு கொண்டு முட்டையைத் துடைத்துப் பார்த்தாலோ, டீ டிக்காஷன் அல்லது செயற்கை நிறமிகளால் முட்டை நிறமூட்டப்பட்டிருப்பின், தண்ணீர் அல்லது பஞ்சின் நிறம் சிறிது பழுப்பாக மாறியிருக்கும்.
ஆக, எந்த வகை கோழி முட்டைகளுக்கும் இடையே ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லாததினால், நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஒன்றேயொன்று, நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும்.!!
ப்ளாஸ்டிக் முட்டை என்பது உண்மையா? பொய்யா? நாளை பார்ப்போம்..!
நன்றி:டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,
நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,
தூத்துக்குடி மாவட்டம்.
For complaints: 9444042322.
++++++++++++++++++++++
வாட்ஸ் ஆப் மூலம் தினசரி தகவலை அறிந்து கொள்ள இணைந்திருங்கள்...