மகாராஷ்டிராவில் தங்கம், வெள்ளி பதக்கங்கள்: தூத்துக்குடி கராத்தே மாணவர்கள் மலேசிய சர்வதேச போட்டிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 கராத்தே மாணவர்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று, மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரி சக்தி, ராகித் ரக்சன், ஜெய்டன் அர்லோ, சுஜித் மேனன் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஆர்.கே. கராத்தே பயிற்சி பள்ளியில், ஜப்பானைச் சேர்ந்த சிட்டோரியோ (Shitoryu) கராத்தே முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கடந்த 18ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் ரெய்க்காடு மாவட்டம் அலிபக் பகுதியில், புடோ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற 26-ஆவது சிட்டோரியோ அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகளில், இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட

  • ஹரி சக்தி, சண்டை பிரிவில் தங்கப் பதக்கமும், கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மேலும் சிறந்த சண்டை வீரர் என்ற சான்றிதழையும் பெற்று சாதனை படைத்தார்.

  • ராகித் ரக்சன், சண்டை பிரிவில் தங்கப் பதக்கமும், கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

  • ஜெய்டன் அர்லோ, கட்டா பிரிவில் தங்கப் பதக்கமும், சண்டை பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றார்.

  • சுஜித் மேனன், கட்டா மற்றும் சண்டை பிரிவுகளில் தலா வெண்கலப் பதக்கங்கள் வென்று சிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, பொது பிரிவில் கலந்து கொண்ட கராத்தே பயிற்சியாளர் ரத்தினகுமார், தங்கப் பதக்கம் வென்று தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்தார்.

இந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நான்கு மாணவர்களும், வருகிற மே மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை, கராத்தே பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் சால்வை அணிவித்து, மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.