தூத்துக்குடியில் நேருக்கு நேர் பைக் மோதல் – அனல்மின் நிலைய தொழிலாளர் உயிரிழப்பு, 2 இளைஞர்கள் கவலைக்கிடம்!

தூத்துக்குடியில் நேருக்கு நேர் பைக் மோதல் – அனல்மின் நிலைய தொழிலாளர் உயிரிழப்பு, 2 இளைஞர்கள் கவலைக்கிடம்!

தூத்துக்குடியில் ஏற்பட்ட பரிதாபமான சாலை விபத்தில், அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு இளைஞர்கள் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (32), என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு அகிலா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று இரவு பணியை முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மனோஜ்குமார், புதிய துறைமுகம்–முத்தையாபுரம் சாலையில் உள்ள சுனாமி காலனி ரயில்வே கேட் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் பலத்த தாக்கத்தில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு பைக்கில் பயணம் செய்த பழையகாயல் பகுதியைச் சேர்ந்த கவிஸ்கர் (20) மற்றும் அவரது நண்பர் ஹேமந்த் (21) ஆகியோர் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெர்மல் நகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

???? இந்த விபத்து, அந்த பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.