“4 ஆண்டுகளாக கனவாகவே இருக்கும் வீடுகள்! தரமற்ற கட்டிடங்களால் குடியேற முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி திருநங்கைகள் – கலெக்டரிடம் பரபரப்பு மனு”

“4 ஆண்டுகளாக கனவாகவே இருக்கும் வீடுகள்! தரமற்ற கட்டிடங்களால் குடியேற முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி திருநங்கைகள் – கலெக்டரிடம் பரபரப்பு மனு”

தூத்துக்குடி மாநகர பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளுக்காக பேரூரணி அருகே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வீட்டு திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததுடன், கட்டப்பட்ட வீடுகளும் தரமற்ற முறையில் இருப்பதால் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக இன்று சமூக செயல்பாட்டாளர் சானியா தலைமையில் திருநங்கைகள் குழுவினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், பேரூரணி பகுதியில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட வீடுகள் முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதுடன், கட்டுமானப் பணிகளும் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வீடுகளில் பாதுகாப்பாக குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தரமான முறையில் பணிகளை நிறைவு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 40 திருநங்கைகள் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அரசு வீடு வழங்க கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுக்கும் விரைவாக வீட்டு வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ரூ.1000 உதவித்தொகையை திருநங்கைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக செயல்பாட்டாளர் சானியா, “திருநங்கைகளின் அடிப்படை வாழ்வாதார மற்றும் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும். பேரூரணியில் கட்டப்பட்ட வீடுகளை தரமான முறையில் முடித்து ஒப்படைக்க வேண்டும். மேலும் வீடு இல்லாத திருநங்கைகளுக்கும் பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநங்கை சமூகத்தினர் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.