மின்சாரம் தாக்கி வியாபாரி உயிரிழப்பு: திமுகவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உயிரிழந்தவர் மனைவி கோரிக்கை!
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில், திமுகவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில், திமுகவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஜெயகணேசன் மனைவி லிங்கசிவா என்பவர் தனது உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் "எனது கணவர் ஜெயகணேசன் விவசாய பொருட்களை தூத்துக்குடி காமராஜ் காய்கனி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தார். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் எனது கணவர் கடந்த 25ஆம் தேதி கீரை கட்டுகளை விற்பனை செய்து விட்டு காய்கனி அங்காடி அருகில் உள்ள அண்ணா சிலையை சுற்றியுள்ள இரும்பு கம்பியை தொட்டபோது, சிலைக்கு சுற்றிலும் அலங்கார மின்விளக்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த மின்வயரில் இருந்து மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்து விட்டார்.
மேற்படி சிலையின் பராமரிப்பினை தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. நிர்வாகம் செய்து வருகின்றார்கள். மின்சார இணைப்பானது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பெயரில் உள்ளது. மேலும் சிலையை சுற்றி மின்சார வயர்கள் பொறுத்தப்பட்டு அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சிலை பொது இடத்தில், பொது மக்கள் நடமாடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் கம்பியில் இணைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பை சரியான மற்றும் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கும் பொறுப்பு மின்சார வாரியத்திற்கும் இருக்கின்றது.
அவர்களின் கவனக்குறையாலும் மின் கசிவை அவர்கள் கவனிக்க தவறி விட்டார்கள். ஆகையால் மேற்படி திமுக தூத்துக்குடி மாவட்ட கழகம் நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்கள் ஆகிய தரப்பினர்களின் அஜாக்கிரதையாலும். கவனக்குறைவாலும், பொறுப்பற்ற தன்மையினாலும், அவர்களது பணியினை சரியாக செய்யாததினாலும், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மேற்படியார்கள் என் கணவரின் இறப்பிற்கு காரணமானவர்கள் ஆவார்கள்.
மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட தி.மு.கழக நிர்வாகம் செயல்பாடுகளினால் ஏற்பட்ட இந்த இறப்பினால் எனது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் எனது வாழ்க்கை பெரிதும் பாதிக்க பெற்றுள்ளது. ஆகையால் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட திமுக நிர்வாகத்திடம் இருந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தருமாறும், அஜாக்கிரதையாக செயல்பட்ட திமுக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், தூத்துக்குடி நகர மின்சார வாரியம், ஆகியோர்கள் மீது தகுந்த விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.