“பசுமை வனம்” பாலைவனமா? துவங்கிய ஒரு வருடத்திலே பராமரிப்பின்றி வாடும் மரங்கள்!

“பசுமை வனம்” பாலைவனமா? துவங்கிய ஒரு வருடத்திலே பராமரிப்பின்றி வாடும் மரங்கள்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே DRDA (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் “பசுமை வனப் பூங்கா” 2025 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி. ஐஷ்வர்யா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மரநடுகை திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பசுமை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஒரு ஆண்டுக்குள் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அப்பகுதியில் நடப்பட்ட மரங்கள் பலவும் உரிய தண்ணீர் வழங்காமல் வாடிய நிலையில் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மரங்களுக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு குண்டுகள் உடைந்தும் சீரமைக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

“பசுமை வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டம் இன்று பாலைவனமாக மாறும் அபாயத்தில் உள்ளது” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடக்க விழாவில் அறிவிக்கப்பட்ட நோக்கங்கள் நடைமுறையில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளனவா?

அல்லது பெயருக்கு மட்டும் திட்டமாக மாறிவிட்டதா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உடனடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.