தூத்துக்குடியில் பிப்.12 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்: ஆதரவு கோரி தீவிர பிரச்சார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில் பிப்.12 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்: ஆதரவு கோரி தீவிர பிரச்சார இயக்கம் தொடக்கம்

மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிரப் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சார இயக்கம் கடந்த பிப்ரவரி 4 முதல் நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி ஆல்பட் அண்ட் கோ சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தொழிலாளர் முன்னேற்ற பேரவை (LPF) மாவட்ட செயலாளர் சுசி ரவீந்திரன் பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரேஷ்புரம், ஒன்றாம் கேட் மற்றும் சிதம்பரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆதரவு திரட்டப்பட்டது.

இந்தப் பிரச்சாரத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட தலைவர் ஆர்.பேச்சிமுத்து, மாவட்ட பொருளாளர் எஸ்.அப்பா துரை, சிவபெருமாள், காசி, சங்கரன், ரவி தாகூர், எல்பிஎஃப் நிர்வாகிகள் பி.முருகன், கருப்பசாமி, ஏஐடியுசி பாலசிங்கம், சுப்ரமணியன், ஐஎன்டியுசி ராஜகோபாலன், பால்ராஜ், ஸ்டீபன், ஏஐசிசிடியூ சகாயம், மின்னல் அம்சத், சிவராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க மற்றும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை காலை புதுக்கோட்டையில் தொடங்கும் பிரச்சாரப் பயணம் புதுக்கோட்டை, சாயர்புரம், திருவைகுண்டம், பேய்குளம், சாத்தான்குளம், உடன்குடி ஆகிய பகுதிகளை கடந்து பரமன்குறிச்சியில் நிறைவடைகிறது.

மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் அனைவரும் இந்த அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக, பிப்ரவரி 12 அன்று வணிகர்கள் கடையடைப்பு செய்து இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.