பேருந்தில் சத்தமாக பாட்டு: பயணிக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.!
பேருந்தில் பாட்டு சத்தமாக ஒலித்ததை தட்டிக் கேட்ட பயணியை தரக் குறைவாகப் பேசிய தனியார் பேருந்து சர்வீஸ் கம்பெனி 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி நகரம் முத்தையாபுரத்தைச்; சார்ந்த கென்னடி என்பவர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து முத்தையாபுரத்திற்கு ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தில் பாட்டு சத்தமாக ஒலித்ததால் நடத்துனர், ஓட்டுநரிடம் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் சத்தத்தை ஓட்டுநர் குறைக்க மறுத்துள்ளார். மேலும் புகார்தாரரை தரக்குறைவாக பேசியதோடு பாதி வழியிலேயே அவரை இறக்கி விட்டனர். எனவே புகார்தாரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் வீட்டிற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான
கென்னடி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூபாய் 10,000; மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 20,000 ஐ இரு மாத காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.