பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியவருக்கு 2½ ஆண்டுகள் சிறை!

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷ் (43/25) என்பவர் கடந்த 2023ம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி (09.07.2025) குற்றவாளி கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷ் என்பவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் முருகப்பெருமாள் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ஜேசு ராஜா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.