தூத்துக்குடியில் அமைச்சர்கள் அதிரடி ஆய்வு: ‘மக்களை கண்ணியமாக நடத்துங்கள்’ – அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அறிவுரை!

தூத்துக்குடியில் அமைச்சர்கள் அதிரடி ஆய்வு: ‘மக்களை கண்ணியமாக நடத்துங்கள்’ – அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அறிவுரை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா ஆகியோர் தலைமையில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்கள், 10 வட்டங்கள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள் மற்றும் 403 கிராம ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசுத் துறைகளின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கங்கள் பெறப்பட்டன.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆ. ஸ்ரீநாத், தமிழக முதலமைச்சரின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கையை சுட்டிக்காட்டி, மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அரசு அலுவலகங்களை நாடி வரும் பொதுமக்களை அதிகாரிகள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதேபோல், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து நலத்திட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் மீன்வளத்துறை இயக்குநர் விஜய கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), ஜி.வி. மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), கு. சரவணன் (ஸ்ரீவைகுண்டம்), க. கருணாநிதி (கோவில்பட்டி), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா. ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கியிருப்பது மாவட்ட நிர்வாக வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.