வேலை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்! தூத்துக்குடியில் 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் போராட்டம்

வேலை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்! தூத்துக்குடியில் 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உடனடியாக வேலை வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புவிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தூத்துக்குடி அருகே உள்ள எப்போதும்வென்றான், கணக்கன்கட்டை, வேலாயுதபுரம், அச்சன்குளம் மற்றும் குமாரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த தொழில்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் எந்தவித பணிகளும் நடைபெறாததால், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டுகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முழுமையான வேலை வழங்கப்படாமல், சுமார் 50 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாகவும், தற்போது வேலை கேட்டால் அதிகாரிகள் "நிதி இல்லை" என்று கூறி திருப்பி அனுப்புவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த ஆண்டு கடுமையான வேலைவாய்ப்பின்மை நிலவி வரும் நிலையில், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பெண்கள் அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாததால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.