தூத்துக்குடி மேலூரில் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (திங்கட்கிழமை) முதல் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு தினமும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து மைசூரு செல்லும் போதும், மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் போதும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலில் பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
இதனால் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு புறப்படும் ரயில் மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் வந்தடையும். மீண்டும் அங்கிருந்து 5.31 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதே போன்று மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு வரும் ரயில் காலை 9.39 மணிக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் கூறும் போது, மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது. இதற்காக கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.