தூத்துக்குடியில் மாயமான இளைஞர் கொன்று புதைப்பு: செல்போன் தகராறில் பயங்கரம்!

தூத்துக்குடியில் செல்போன் தகராறில் இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி செல்வம் (எ) அசால்ட் (24). மீனவர். கடந்த 20ம் தேதி மாரிசெல்வத்திற்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த 4 சிறுவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் மாரிசெல்வத்தின் செல்போனை உடைத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், பிரபு என்பவரது செல்போனை பறித்து கடலில் வீசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றிரவே மாரி செல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர், அவரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி முதல் மாரிசெல்வத்தை காணவில்லை என தாளமுத்துநகா் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். ஆனால் தாளமுத்துநகர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அவரது பெற்றோர் மனு அளித்தனா்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் சந்தேகத்தின்பேரில் மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாரிசெல்வம் என்ற அசால்ட், கடந்த 21ம் தேதி திரேஸ்புரம் உப்பு சங்க அலுவலகம் பின்புறம் வந்து கொண்டிருந்தபோது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கியுள்ளது. அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடி உள்ளார். இருப்பினும் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி செங்கலால் தாக்கியுள்ளது.
இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாரிசெல்வம் புதைக்கப்பட்ட லூா்தம்மாள்புரம் கோட்டை சுவா் பகுதியில் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை சிறுவன் அடையாளம் காட்டினான். அந்த பகுதியில் இளைஞா் உடல் புதைக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. புதைக்கப்பட்ட இளைஞர் உடலை விஏஓ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பரபரப்பாக காணப்படுகிறது.
-----------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE