கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம்! தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் எச்சரிக்கை

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஏ.ஜெஸ்ஸி, மாவட்டச் செயலாளர் ஜெயபாக்கியம், மாவட்டத் தலைவர் பெருமாள், முன்னாள் மாநில துணைத்தலைவர் தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சத்துணவு ஊழியர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாநிலத் தலைவர் செல்லத்துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தின் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு எங்களது வாழ்த்துக்களையும்,  தெரிவித்துக் கொள்கிறோம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்த சத்துணவு திட்டம் 44 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 60 ஆயிரம் சத்துணவு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

வருகிற 18-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில், சத்துணவு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான காலமுறை ஊதியம் வழங்குதல், அகவிலைப்படியுடன் கூடிய ரூ.7,850 ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவற்றை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

மேலும், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைத்து அவர்களது மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 60 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான காலமுறை ஊதியம், உள்ளீட்டு நிலுவை கோரிக்கைகள் மற்றும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில செயற்குழு மீண்டும் கூடி முடிவெடுக்கும்" என்றார்.

மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு சத்துணவு சங்கம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது , சத்துணவு திட்டத்தோடு காலை உணவுத் திட்டத்தை இணைத்திட வேண்டும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் 44 ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது இத்திட்டத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள 60 சதவீத காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,  சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை  ஊதியம் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவது, 13.2.2026 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசு ஆணை எண் 41 படி ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்களை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு என்ன பதில் அளிக்கிறது என்பது மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சத்துணவு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

///////////