“நடவடிக்கை இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு” – மூலக்கரை விவசாயிகள் சார்பில் சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை..

“நடவடிக்கை இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு” – மூலக்கரை விவசாயிகள் சார்பில் சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய நான்கு வழிச்சாலை திட்டம் காரணமாக விவசாய நிலங்கள் வெள்ள அபாயத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மூலக்கரை கிராமத்தை சுற்றி உள்ள சீனிமாவடி குளம், நல்லூர் குளம் மற்றும் நத்தக் குளம் ஆகிய மூன்று குளங்களில் இருந்து வடிகால் மற்றும் பாய்மான வாய்க்கால்கள் வழியாக சிறு கிராமங்களுக்கு வரும் மழைநீர் தேங்காமல் சீராக செல்ல ஆண்டுதோறும் ஒப்படிச் சங்கம் (விவசாய சங்கம்) மற்றும் தனியார் கெமிக்கல் நிறுவனமான D.C.W நிறுவனத்தின் உதவியுடன் சுமார் ரூ.8.5 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குளங்கள் மற்றும் வாய்க்கால்களை ஒப்படிச் சங்கம் பராமரித்து வருவதால், மழைக்காலங்களில் மூலக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ள சேதம் ஏற்படாமல் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி – திருச்செந்தூர் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை (NH-32) புதிய 4 வழிச்சாலை பணிக்காக மூலக்கரை, அம்மன்புரம் மற்றும் நத்த கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சாலை திட்டம் தற்போதுள்ள வடிகால் பாதையை பாதிக்கும் வகையில் அமைந்தால், மழைக்காலங்களில் பல கிராமங்களும் சுமார் 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது கடம்பாக் குளம் உடையாமல் இருந்ததால்தான் சீனிமாவடி குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் பெரும் சேதத்திலிருந்து தப்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பரிந்துரைக்கும் மாற்றுப் பாதையில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என மூலக்கரை கிராம ஒப்படிச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பான விசாரணைக்காக விவசாயிகள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத்தின் தலைவர் சுபாஷ் பண்ணையார், “மூலக்கரை கிராமத்தை சுற்றி நான்கு வழிச்சாலை அமைந்தால் 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். தேர்தலுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை” என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை கடுமையாக விமர்சித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.