மனைவியை சேர்த்து வைக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற கணவர் மீட்பு!
கழுகுமலை அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார்.
கழுகுமலை அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அடுத்த கழுகுமலை அருகே பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடம் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பாக அவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
குருவிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த வீரபுத்திரன் மகன் ரகுவரன் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலையில் கழுகுமலை அருகே குருவிகுளம்-அத்திப்பட்டி சாலையிலுள்ள 100 அடி உயர பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தில் ஏறி திடீரென கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசார் கொடுத்த தகவலின் பேரில் கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் டவரில் ஏறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், எனது மனைவி சங்கீதா குடும்ப தகராறு காரணமாக குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அவரை என்னோடு சேர்த்து வைக்க உறுதிமொழி கொடுத்தால் தான் கீழே இறங்கி வருவேன் என பிடிவாதமாக கூறினார். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அவரிடம் சுமார் 2 மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அவரது மனைவியுடன் சேர்த்து வைப்பதாக அவர்கள் உறுதி மொழி அளித்தனர். இதை தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கி உறவினர்களிடம் ஒப்படைத்தார். செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.