தூத்துக்குடியில் தலையில் முட்புதர் சுமந்து கலெக்டர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலர்... சி வா குளம் சீரமைக்க கோரிக்கை!

தூத்துக்குடியில் தலையில் முட்புதர் சுமந்து கலெக்டர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலர்... சி வா குளம் சீரமைக்க கோரிக்கை!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சீ வா அரசு குளத்தை உடனடியாக சீரமைத்து, முழுவதும் பரவி காணப்படும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சீ வா குளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கும் பகுதியாக மாற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குளத்தை சுற்றி நடைபாதையும் அமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது மாநகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பு குறைவால், குளம் முழுவதும் முட்புதர்கள் மற்றும் முள்செடிகள் பரவி காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் குளப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பகுதியில் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் நிலையில், குளத்தின் தற்போதைய நிலை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து வந்தார்.

இதையடுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், குளப்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட முட்புதர்களை தலையில் சுமந்தபடி வந்தார். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நடவடிக்கை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பாலகிருஷ்ணன், சீ வா குளப்பகுதியில் உள்ள முட்புதர்களை உடனடியாக அகற்றி, அந்த பகுதியை பறவைகள் சரணாலயமாக மாற்றும் வகையில் பலன்தரும் மரங்களை நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.