தூத்துக்குடியில் அதிரடி ரெய்டு..! பிரபல கடைகளில் 1,000-க்கும் மேற்பட்ட போலி ‘All Out’ கொசு விரட்டி பாட்டில்கள் பறிமுதல் – பொதுமக்கள் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் அதிரடி ரெய்டு..! பிரபல கடைகளில் 1,000-க்கும் மேற்பட்ட போலி ‘All Out’ கொசு விரட்டி பாட்டில்கள் பறிமுதல் – பொதுமக்கள் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவனங்களில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி கொசு விரட்டி திரவ பாட்டில்களை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள விக்டோரியா சாலை மற்றும் ஜீன் பேக்டரி சாலை பகுதிகளில் செயல்பட்டு வரும் சில கடைகளில், முன்னணி நிறுவனத்தின் பெயர் மற்றும் வர்த்தக முத்திரையைப் போலியாகப் பயன்படுத்தி கொசு விரட்டி திரவங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவதாக திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் நேற்று தூத்துக்குடிக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், தூத்துக்குடியின் முக்கிய வணிக நிறுவனங்களாகக் கூறப்படும் “வேலவன் ஸ்டோர்ஸ்” மற்றும் “குரு டிரேடர்ஸ்” ஆகிய கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்ற “All Out” கொசு விரட்டி திரவ பாட்டில்களைப் போலவே அச்சு அசலாக தயாரிக்கப்பட்ட 1,014 போலி பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போலி பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.86,190 என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அந்தப் போலி கொசு விரட்டி பாட்டில்கள் அனைத்தும் முறைப்படி பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் வர்த்தக முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்தி பொதுமக்களின் உடல்நலத்துடன் விளையாடிய குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடை காலத்தில் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ள சூழலில், முக்கிய வணிக நிறுவனங்களிலேயே இத்தகைய போலி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.