தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: அறுவை சிகிச்சை தளத்தில் கரும்புகை – நோயாளிகள் அவசர மாற்றம்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: அறுவை சிகிச்சை தளத்தில் கரும்புகை – நோயாளிகள் அவசர மாற்றம்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுடன் 5 தளங்களில் இயங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையின் 5-வது தளத்தில் அமைந்துள்ள அறுவை சிகிச்சை அரங்கம் அருகே உள்ள மின் சுவிட்ச் போர்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் கரும்புகை வெளியேறி, அப்பகுதியில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தீப்பற்றியதை கவனித்த உடனே மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின்சார விநியோகத்தை நிறுத்தினர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. சில நேரம் அந்த பகுதியில் புகை மூட்டம் காணப்பட்டதால் அங்கு பதற்ற நிலை நிலவியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5-வது தளத்தில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக 4-வது தளத்திற்கு மாற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி கருணாகரன் தெரிவித்ததாவது, அவசர காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர்கள் துரிதமாக செயல்பட்டதன் மூலம் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்றார்.

மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் மின்சாதன பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.