தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! சார்பதிவாளர் அலுவலகங்களில் ₹2.65 லட்சம் சிக்கியது – அதிகாரிகள் சிக்கலில்!

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! சார்பதிவாளர் அலுவலகங்களில் ₹2.65 லட்சம் சிக்கியது – அதிகாரிகள் சிக்கலில்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராததாக சந்தேகிக்கப்படும் ரூ.2.65 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களிடம் இருந்து தொடர்ந்து லஞ்சப் புகார்கள் வந்ததாக கூறப்படும் நிலையில், அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரு அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். விசாரணைக்காக அலுவலக நுழைவு வாயில்கள் கட்டுப்படுத்தப்பட்டு, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த சோதனையின் போது, ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் கிருபாகரனிடம் இருந்து கணக்கில் வராததாக சந்தேகிக்கப்படும் ரூ.2.15 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமையிலான குழுவினர் மதியம் தொடங்கி 6 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் அலுவலகத்திற்குள் வந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட பதிவுத்துறை அலுவலகங்களில் நீண்ட காலமாக எழுந்து வந்த லஞ்ச புகார்களின் பின்னணியில் நடைபெற்றுள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவுத்துறை அலுவலகங்களைச் சுற்றியுள்ள லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ????