தூத்துக்குடி டோல்கேட் பரபரப்பு! லாரிகள் முற்றுகை – போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி டோல்கேட் பரபரப்பு! லாரிகள் முற்றுகை – போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் லாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 50% டோல் கட்டண சலுகை வெள்ளிக்கிழமை இரவு திடீரென ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் சனிக்கிழமை காலை லாரிகளை சுங்கச்சாவடியில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக இருபுறமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் நீண்ட வரிசையில் சிக்கிக் கொண்டன.

முன்னதாக ₹205 கட்டணமாக வசூலிக்கப்பட்ட வாகனங்களுக்கு தற்போது ₹420 மற்றும் ₹285 வசூலிக்கப்பட்ட வாகனங்களுக்கு ₹585 வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். இதனால் தினசரி சுமார் ₹2000 வரை கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லாதது, இரவு நேரங்களில் இரண்டு டோல்கள் மட்டும் திறந்து வைப்பது, தனி வழித்தட வசதி இல்லாதது போன்ற பிரச்சனைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பழைய கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதில் லாரி புரோக்கர்கள் சங்கத் தலைவர் சுப்புராஜ். லாரி உரிமையாளர்கள் சங்க இணைச்செயலாளர் முருகன் உள்ளிட்ட லாரி புரோக்கர்கள், லாரி ஓட்டுநர்கள் திரளாக பங்கேற்றனர்.