தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்... இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பலுக்கு க்யூ பிரிவு வலைவீச்சு!

தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்... இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பலுக்கு க்யூ பிரிவு வலைவீச்சு!

தூத்துக்குடி: தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்ட சரக்கு வாகனத்தை க்யூ பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் (எஸ்பி) மேற்பார்வையில், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இருந்து பீடி இலைகள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் முதல்நிலை காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

ஜூலை 10-ம் தேதி இரவு 10.30 மணி அளவில், இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 30 கிலோ எடை கொண்ட 18 பீடி இலை மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.

போலீசார் வருவதை அறிந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகள் மற்றும் சரக்கு வாகனம் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தப்பியோடிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிக்க க்யூ பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.