கார் மோதி உயிரிழந்த 3 பெண்களுக்கு தலா ரூ. 3 லட்சம் அரசு நிதியுதவி : அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்!
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது கார் மோதி விபத்தில் உயிரிழந்த 3 பெண்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் பகுதியிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலுக்கு கடந்த டிச. 24ஆம் தேதி 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். 25ஆம் தேதி மாலை குறுக்குச்சாலை அருகே சென்றபோது பின்னால் வந்து கார், பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், திருச்செந்தூர் கரம்பவிளையைச் சேர்ந்த சுந்தரம் மனைவி கஸ்தூரி (55), வீரபாண்டியன்பட்டணம் செந்தில் வீதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சுந்தர்ராணி (60), வடிவேல் மனைவி இசக்கியம்மாள்(55) ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.இதையடுத்து, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு நேரடியாக சென்று அவர்களது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவியாக தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம், வட்டாட்சியர் தங்கமாரி, திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் வாவாஜி பக்கீர் மூகைதீன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், சரவணன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், நகரச் செயலர் வாள் சுடலை, துணைச் செயலர் மகராசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.