தூத்துக்குடி எஸ்.ஐ வேல்பாண்டி பைக் விபத்தில் உயிரிழப்பு.. நெல்லையில் சோக சம்பவம்!

தூத்துக்குடி எஸ்.ஐ வேல்பாண்டி பைக் விபத்தில் உயிரிழப்பு.. நெல்லையில் சோக சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இளம் காவல் அதிகாரி பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அரவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனின் மகன் வேல்பாண்டி (32), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

நேற்று தனது சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேல்பாண்டி, தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் நெல்லை கே.டி.சி நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த ஸ்கூட்டர் திடீரென அவரது மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேல்பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஸ்கூட்டர் ஓட்டிய பெண் மற்றும் விபத்து நடந்த விதம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

32 வயதான இளம் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரும், சக காவலர்களும், பொதுமக்களும் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.