உயர்நீதிமன்ற தடையை மீறி சுங்க கட்டணம் வசூலிக்கும் தூத்துக்குடி டோல்கேட்... பொதுமக்கள் வாக்குவாதம்!

தூத்துக்குடி-மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் வழக்கு தொடுத்த நபர்கள் முற்றுகை லாரிகளை நிறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு..,
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 135 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் மற்றும் மதுரை எலியார்பத்தி ஆகிய பகுதியில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த சுங்கச்சாவடி கட்டண வசூல் செய்யும் நிறுவனம் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும், மேலும் சாலையின் நடுவே உள்ள சென்ட்ரல் மீடியன் பகுதியில் 68 ஆயிரம் அரளி செடி உள்ளிட்ட செடிகளை நட வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் தற்போது வரை பின்பற்றப்படவில்லை. மேலும் முறையாக சாலை பராமரிப்பு பணி ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலையில் முகத்தை தடுக்கும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும் கழிப்பிடம் குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரவில்லை.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி கே டி சி நகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் இந்த இரண்டு சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூல் செய்வதை நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளாட் அமர்வு முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை உத்தரவு விதித்து உத்தரவு பிறப்பித்தனர்..
ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது வரை தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்யும் பகுதிக்கு வந்த வழக்கு தொடர்ந்த நபர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிராகவன் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் டோல்கேட் நிர்வாகத்திடம் உடனடியாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி கட்டணத்தை வசூல் செய்வதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்..
ஆனால் டோல்கேட் நிர்வாகம் தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை உத்தரவு வந்த பின்பே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.. இதைத்தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது..
எனவே இந்த விஷயத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வழக்கு தொடர்ந்தவர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்...