திருச்செந்தூர் கோயில் விவகாரம் தீவிரம்; அறிக்கைப் போரில் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் ரமேஷ் நேருக்கு நேர் மோதல்!

திருச்செந்தூர் கோயில் விவகாரம் தீவிரம்; அறிக்கைப் போரில் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் ரமேஷ் நேருக்கு நேர் மோதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட விவகாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட கண்டன அறிக்கைக்கு, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், திருச்செந்தூர் கோயிலில் புதியதாகப் பொறுப்பேற்ற அமைச்சர் ரமேஷ், திடீர் ஆய்வு என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக பக்தர்களுக்குச் சேவை செய்து வரும் பாரம்பரிய அர்ச்சகர் சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், கோயிலின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மீது வன்மையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இதற்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், "உங்களைப் போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடையாது. மக்களைச் சுரண்டிப் பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும், "பக்தர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தவறு செய்தவர்களைத் தண்டித்தால் தங்களுக்கு ஏன் திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது புரியவில்லை. திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் பல முறைகேடுகளை விரைவில் வெளிக்கொணர்வேன். அதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.