ஆறுமுகநேரி பள்ளி அருகே 450 கிராம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது; போலீஸார் அதிரடி நடவடிக்கை

ஆறுமுகநேரி பள்ளி அருகே 450 கிராம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது; போலீஸார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பள்ளி மைதானம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து, மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், எஸ்பி உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார் பேயன்விளை புதூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் பின்புற மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

ரோந்து வந்த போலீஸாரைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதையடுத்து போலீஸார் விரட்டிச் சென்று இருவரையும் மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்த பையில் 450 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒருவர் காயல்பட்டினம் கீழநயினார் தெருவைச் சேர்ந்த அப்துல்லா ஷாகிப் மகன் அபூபக்கர் சித்திக் (21) என்பதும், தற்போது பேயன்விளையில் வசித்து வருவதும் தெரியவந்தது.

மற்றொருவர் பேயன்விளை பாஸ் நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வகுமார் (22) என்பதும் போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.