தூத்துக்குடி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் துவக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் துவக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று துவங்கியது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச.17, 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழை பாதிப்பை கருத்தில் கொண்டு விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. 

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பின்பு மாவட்டத்தில் உள்ள 1221 தொடக்கப் பள்ளிகள், 304 நடுநிலைப் பள்ளிகள், 111 உயா்நிலைப் பள்ளிகள், 218 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,854 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மழை வெள்ள பாதிப்பால் புத்தகம் மற்றும் நோட்டுகளை இழந்த மாணவா்-மாணவிகளுக்கு புதிய நோட்டு, புத்தகங்களும், மேலும் அனைத்து மாணவா்- மாணவிகளுக்கும் 3ஆம் பருவ புத்தகங்களும் வழங்கப்பட்டன. 

இந்நிலையில், விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் துவங்கியது. இதன்படி காலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது.  இதில் மாணவர்கள் மற்றும் மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.