காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போகுதையா...! – சட்டமன்ற அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள்

காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போகுதையா...! – சட்டமன்ற அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள்

தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி, மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அவர்கள் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.00 மணியளவில் நடைபெறும் என அமைச்சரின் சுற்றுப்பயண விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களுடன் சட்டமன்ற அலுவலகத்திற்கு காலை முதலே வந்திருந்தனர்.

ஆனால், காலை சுமார் 9.00 மணி முதல் 11.00 மணி வரை, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் சட்டமன்ற அலுவலகத்தில் காத்திருந்தும், சட்டமன்ற உறுப்பினர் வராததால் ஏமாற்றத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு கூடியிருந்த பலரும், "காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போகுதையா..." என்ற பிரபல நகைச்சுவை வசனத்தை நினைவுகூரும் வகையில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தொலைதூர பகுதிகளில் இருந்து வந்த முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் சிரமத்திற்குள்ளானதாகவும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நேரத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. மக்கள் சந்திப்பு தாமதமானதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர் தரப்பில் விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.