1200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு அபாயம் மாற்றுப் பாதை கோரி விவசாயிகள் மனு – நடவடிக்கை இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

1200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு அபாயம் மாற்றுப் பாதை கோரி விவசாயிகள் மனு – நடவடிக்கை இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மூலக்கரை, அம்மன்புரம், நத்தக்குளம் ஆகிய கிராமங்கள் வழியாக தூத்துக்குடி – திருச்செந்தூர் – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் பேரில், நிலம் ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டப்படி, குளங்களின் கரை வழியாகவும் 40க்கும் மேற்பட்ட பாசன கால்வாய்களை அகற்றியும் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதனால் சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் அபாயம் உருவாகும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாசன கால்வாய்கள் பாதிக்கப்படுவதால் நீர்வரத்து தடைபடும் நிலையும் உருவாகும் என தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மூலக்கரை பகுதி விவசாய அபிவிருத்தி சங்கம் சார்பில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

“எங்கள் விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க நேரிடும்” என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் உடனடி ஆய்வு மேற்கொண்டு மாற்றுப் பாதை குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.