கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி மாபெரும் மருத்துவ முகாம் : ஆட்சியர் தகவல்!
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி மாபெரும் மருத்துவ முகாம் : ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 100வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24ஆம் தேதி மாபெரும் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 24ம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் ராஜா பள்ளி, உடன்குடி டி.என்.டி.டி.ஏ. பள்ளி ஆகிய 2 இடங்களில் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடைபறுகிறது.
இம்முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளார்கள். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இல்லாத இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மருத்துவ கல்லூரியில் உள்ள இருதய நிபுணர்கள், சிறுநீரக நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்களை வரவழைத்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
ஊரக பகுதி மக்களை அழைத்து வந்து பாசோதனைகள் செய்யப்படுகிறது. முகாமில் ஸ்கேன், இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் என அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் செய்யப்படுகிறது. நோய்களை கண்டறிந்து மருந்துகள் வழங்கப்படுவதுடன், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் அடுத்த 2 வாரங்களில் சிகிச்சை அளிக்கப்படும்.
முகாம் தொடர்பாக ஊரகப்பகுதிகளில் மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய் துறை மூலம் விளம்பர பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.