5 ஆண்டு திமுக ஆட்சி சாதனை தொடர வேண்டுமா?’ – தெருமுனை பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் அதிரடி பேச்சு!”

5 ஆண்டு திமுக  ஆட்சி சாதனை தொடர வேண்டுமா?’ – தெருமுனை பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் அதிரடி பேச்சு!”

தூத்துக்குடியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் சாதனைகள் தொடர, மீண்டும் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3ஆம் மைல் பகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர் திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். இதில் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்,

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று, இந்தியாவிற்கே முன்னுதாரணமான மாநிலமாக திகழ்கிறது என்றார்.

மேலும், உயர் கல்வித்துறையில் தமிழகத்தில் 52% சாதனை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு 2050க்குள் 50% இலக்கு குறித்து பேசுவது ஆச்சர்யம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கலைஞர் ஆட்சியில் தொடங்கிய கணினி புரட்சி இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கிராமப்புற மக்களுக்கு “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மத மற்றும் ஜாதி கலவரங்கள் இல்லாத அமைதியான ஆட்சி நடைபெற்று வருவதாகவும், திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கி வருவதாகவும் கூறினார்.

அதேபோல், முந்தைய ஆட்சியில் மத்திய அரசின் பல்வேறு சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து விமர்சித்த அவர், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க திமுக ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

புதிய அரசியல் கட்சிகள் குறித்து பேசும்போது, அரசியல் அனுபவம் மற்றும் உழைப்பின் மூலம் தான் தலைமை நிலை அடைய முடியும் என்றும், காலமே அதற்கு பதில் சொல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி மாநகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதிய சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றும், அதற்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.