தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : பயணிகளிடம் தீவிர சோதனை!

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : பயணிகளிடம் தீவிர சோதனை!

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். 

தூத்துக்குடி விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னையில் உள்ள விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் மற்றும் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு விரைந்து வந்து மோப்ப நாய்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். 

அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இது வதந்தி என தெரியவந்தது. இதனிடையே புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி - சென்னை விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது. ஆனால், பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் வழக்கம் போல் இன்று பிற்பகல் புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த அனைவரும் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.