பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் ஜன.26ல் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!!
பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் ஜன.26ல் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி கரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் போடப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு இன்கோவாக் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அனைத்து கட்ட பரிசோதனைகளும் வெற்றி அடைந்த நிலையில், அவசர கால அடிப்படையில் இன்கோவாக் தடுப்பு மருந்தை பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சூழலில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச அறிவியல் திருவிழாவில் பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா பங்கேற்றார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் கூறியதாவது. மூக்கின் வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளோம். மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்து ரூ.325 விலையிலும் தனியாருக்கு ரூ.800 விலையிலும் விற்பனை செய்யப்படும்.
கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய்க்கு முதல்முறையாக உள்நாட்டில் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளோம். இந்த மருந்து அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் உட்பட 8 கரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கண்டிப்பாக இரு தவணை தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். மூக்கு வழியாக செலுத்தும் இன்கோவாக் கரோனா தடுப்பு மருந்து ஒரு தவணையே போதுமானது.
தடுப்பூசிகளை ஒப்பிடும்போது மூக்கு வழியாக செலுத்தும் இன்கோவாக் தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் மிகவும் குறைவாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தலாம்.இவ்வாறு சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.