ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் : ஆட்சியரிடம் கோரிக்கை!

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான (BT/ BRTE) -க்கான கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு ஆசிரியர்கள் விடுத்துள்ள கோரிக்கை மனு "2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை (BT / BRTE) - நிரப்புவதற்கான அறிவிப்பாணையினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 4- ஆம் தேதி தேர்வு நடத்தியது. அதனைத் தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் நான் தேர்ச்சி பெற்றேன்.
அதன்பின் ஜீன் மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டோம். பின் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட உத்தேச தேர்வுப் பட்டியலிலும் பெயர் இடம்பெற்றது. தற்போது உத்தேச தேர்வுப்பட்டியல் வெளியிட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகியும் எங்களுக்கு இதுநாள் வரை கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆனால் எங்களுடன் தேர்ச்சி பெற்று ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பலநாட்களுக்கு முன்பே பணியில் சேர்ந்துவிட்டனர்.
இத்தேர்வு 10 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றதால் தனியார் பள்ளியில் வேலை பார்த்த நான் வேலையினை துறந்து விட்டு படித்தேன். மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் அதிகமானோர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். அவர்களின் பணிக்காலமும் மிகவும் குறைவு.
தற்போது அரையாண்டுத் தேர்வுக்காலம் என்பதால் தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே எங்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான (BT/ BRTE) -க்கான கலந்தாய்வினை உடனே நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.