சிலிண்டர், இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து சிபிஎம் நூதன போராட்டம்! விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள்

சிலிண்டர், இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து சிபிஎம் நூதன போராட்டம்! விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலன்களுக்கு எதிரான 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றிய ஒன்றிய அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும், மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியான பொதுமக்களுக்கும் முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் விவிடி சிக்னல் அருகே சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர் எஸ். நாகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் குறித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து ஆகியோர் கோரிக்கைகளின் அவசியத்தை விளக்கி உரையாற்றினர்.

மேலும் ஒன்றிய செயலாளர் சங்கரன், மாநகரக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், இனிதா, ஆனந்த், கிளைச் செயலாளர்கள் வயணப்பெருமாள், மனோகரன், ஆறுமுகம், சசிகுமார், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர் உரிமைகளை பாதிக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.