கொடுத்த நகையை திருப்பிக் கேட்ட தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு பதிவு!
சாத்தான்குளம் அருகே கொடுத்த நகையை திருப்பிக் கேட்ட தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சாத்தான்குளம் அருகே கொடுத்த நகையை திருப்பிக் கேட்ட தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலையா (வயது 56). கூலித்தொழிலாளியான இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான கோடீஸ்வரன், அவருடைய மனைவி தனலட்சுமி ஆகியோர் கடந்த 5.1.2020 அன்று வீட்டிற்கு வந்து ரூ.1 லட்சம் கடனாக கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் இல்லையென கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்யும் சூழலில் இருப்பதாக கூறி அவரது மனைவியின் 4 பவுன் தங்க சங்கிலியை வாங்கி கொண்டு 4 நாட்களில் திருப்பி தருவதாக கூறிச்சென்றனராம்.
4 மாதங்கள் ஆகியும் கொடுத்த நகையை திருப்பி தராததால் வேலையா மனைவி கலையரசி, கோடீஸ்வரன் வீட்டுக்கு சென்று நகையை திருப்பி கேட்டார். அப்போது தம்பதி இருவரும் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளளனர். மேலும் வேலையாவும் தொலைபேசியில் கேட்டபோது அவரையும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து வேலையா சாத்தான்குளம் போலீசிலும், மாவட்ட எஸ்பி இடமும் புகார் செய்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதுபற்றி சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி கொடுத்த நகையை திருப்பி தராமல் ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்ததாக கோடீஸ்வரன், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.