திருச்செந்தூரில் ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் டிரைவர் உயிரிழப்பு: மின்கம்பம் மீது மோதிய பேருந்து!!

திருச்செந்தூரில் ஓடும் பேருந்தில் திடீரென ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். பேருந்து மோதியதில் வட மாநிலத் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 7 மணியளவில் அரசுப் பேருந்து செம்மறிக்குளம் கிராமத்திற்கு புறப்பட்டது. பேருந்தை குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சோ்ந்த ஜெயசிங் மகன் அல்டாப் (48) ஓட்டினாா். அப்போது அரசு மருத்துவமனையை தாண்டி வரும் போது அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளி தினேஷ் மீதும் மோதி, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மின் கம்பம் உடைந்து விழுந்தது. தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், ஆய்வாளா் இன்னோஸ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று அரசுப் பேருந்து ஓட்டுநரையும், காயமடைந்த வட மாநில தொழிலாளியையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஓட்டுநரை பரிசோதித்த மருத்துவா்கள் மாரடைப்பு ஏற்பட்டதில் அவா் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் வட மாநில தொழிலாளியை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மின்கம்பத்தில் பேருந்து மோதியதால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மின்வாரியத்தினா் விரைந்து வந்து பேருந்தை அகற்றி மின் வழித்தடத்தை சீரமைத்தனா். .
வழக்கம் போல் பணிக்கு வந்த ஓட்டுநருக்கு, பேருந்தில் வைத்து திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அந்த நிமிடத்திலும் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்துவதற்கு முயற்சித்துள்ளாா். அப்போது மின்கம்பத்தின் மீது பேருந்து மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டு பயணிகள் உயிா்த் தப்பினா். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.