புகார் அளிக்க வந்த பெண்ணுக்கே செல்போனில் தொல்லை? ஆறுமுகநேரி காவல் ஏட்டு சஸ்பெண்ட்!

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கே செல்போனில் தொல்லை? ஆறுமுகநேரி காவல் ஏட்டு சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஏட்டு அக்னிமுத்து, புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயல்பட்டினம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான புகார் அளிப்பதற்காக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் 36 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது பணியில் இருந்த காவல் ஏட்டு அக்னிமுத்து, அந்தப் பெண்ணின் கைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர், தேவையற்ற முறையில் தினசரி காலை வணக்கம், இரவு வணக்கம் உள்ளிட்ட குறுஞ்செய்திகளையும், உணவு குறித்து தொடர்ந்து தகவல்களையும் அனுப்பி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், அப்பகுதியைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து சமூக ஆர்வலர், காவல் ஏட்டு அக்னிமுத்துவை தொடர்புகொண்டு அவரது செயல்பாடு குறித்து கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவு பின்னர் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. இந்த ஆடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்விகளையும் எழுப்பியது.

ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் காவல் ஏட்டு அக்னிமுத்து ஒழுங்கீனமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விஜயகுமார் உத்தரவின் பேரில், காவல் ஏட்டு அக்னிமுத்து உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கே காவலர் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான ஆடியோ தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.