உலகளவில் இந்தியா தொழில் மையமாகவும், வளமான நாடாகவும் உள்ளது : நாகாலாந்து ஆளுநர் பேச்சு!

உலகளவில் இந்தியா தொழில் மையமாகவும், வளமான நாடாகவும் உள்ளது : நாகாலாந்து ஆளுநர் பேச்சு!

உலகளவில் இந்தியா தொழில் மையமாகவும், வளமான நாடாகவும் உள்ளது : நாகாலாந்து ஆளுநர் பேச்சு!

உலகளவில் இந்தியா 2-வது வளமான நாடாகவும், தொழில் மையமான நாடாகவும் உருவெடுத்துள்ளதாக நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் சிறப்பு கூட்டம் நேற்று மாலையில் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன், சங்க துணைத்தலைவர் பிரேம்வெற்றி, இணை செயலாளர் விவேகம் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு, தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் இந்தியாவின் முன்னேற்றம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களிடம் இந்தியா அடிமைப்பட்டு இருந்த போது, அவர்களை எதிர்த்து கப்பல் விட்டவர் வ.உ.சிதம்பரனார். அவருக்கு நம்மால் முடியும் என்ற துணிவு இருந்தது. அந்த துணிவு நம் வியாபாரிகளுக்கு இருக்க வேண்டும். அந்த துணிவு வர வேண்டும் என்றால், அதற்கு அடிப்படை தேவை நம்பிக்கை. அதற்கான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். 

வாஸ்கோடகாமா இந்தியாவுக்கான கடல் வழியை கண்டுபிடித்தார் என்றுதான் பாடத்தில் படித்து வருகிறோம். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, உலகலாவிய சரித்திர அமைப்புக்கு வாஸ்கோடகாமா கைப்பட எழுதிய டைரி கிடைத்து உள்ளது. அதில், நான் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று எனது நாட்டில் உள்ள பெரிய படகில் புறப்பட்டேன். அப்போது ஒரு இடத்தில் பெரிய கப்பல்கள் நின்றன. அவர்களிடம் விசாரித்த போது, இந்தியாவில் இருந்து வியாபாரம் செய்ய வந்து இருப்பதாக தெரிவித்தனர். அந்த வியாபாரிகளை பின்தொடர்ந்து இந்தியாவை சென்றடைந்தேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் கடல் வழியை கண்டறிந்த வியாபாரம் செய்தவர்கள் இந்தியர்கள். இதனை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பாடப்புத்தகத்தில் திருத்தம் கொண்டு வர முயன்ற போது, பல்வேறு எதிர்ப்புகளால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. வாஸ்கோடகாமா இந்தியாவுக்கான கடல் வழியை கண்டுபிடித்தார் என்று படிக்கும் போது நம்பிக்கை கிடைக்குமா, இந்தியர்கள் கடல் வழி வியாபாரம் செய்தனர், கட்டிடக்கலை, கப்பல் கட்டும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினர் என்பதை மாணவர்களிடம் கூறும் போது, அவர்களுக்கு நம்பிக்கை கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும். 

பாரத நாடு எந்தவகையிலும் பின்தங்கி இருக்கவில்லை. தூத்துக்குடி முத்துக்குளித்தலில் சிறந்து விளங்கியது. வீரத்திலும் சிறந்து விளங்கினர். நம் இந்தியர்களின் திறமைகளை பாடப்புத்தகத்தில் கூறி நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். இதுதான் ஒவ்வொரு இந்தியனுக்கும் தற்போது தேவைப்படுகிறது. வளர்ச்சி பெற்ற இந்தியா இடைப்பட்ட காலத்தில் வீழ்ச்சி அடைந்தது. ஆனாலும் தற்போது வளர்ந்து வருகிறது. நாடு முன்பு போன்று இல்லை. 

நாம் மாறி இருக்கிறோம். உலக நாடுகளில் 2-வது வளமான நாடாகவும், தொழில் மையமான நாடாகவும், பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாகவும், விவசாயம், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வருகிறது. வெளிநாடுகள் நம் நாட்டின் பணத்தை ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. இந்த நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு. இந்த நம்பிக்கை வேண்டும். நம் நாட்டின் திறமை கரோனா காலத்தில் உலகத்துக்கு தெரியவந்தது. எதிரி நாடு, நட்பு நாடு என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் மருந்து வழங்கப்பட்டது. 

என் நாட்டுக்கு எது நல்லதோ, அதனை நாம் சுதந்திரமாக முடிவு எடுக்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளோம். அனைத்து நாட்டுடன் வர்த்தக உறவு வளர்ந்து உள்ளது. நீங்கள் பெரும் வர்த்தகர்களாக இருக்கிறீர்கள். வ.உ.சி.யின் துணிவு வர்த்தகர்களுக்கு வரவேண்டும். இந்தியா 100-வது சுதந்திர தினத்தில் வல்லரசுக்கு வல்லரசாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கனவு கண்டு வருகிறார். அது உங்களை நம்பித்தான். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பா.ஜனதா நிர்வாகிகள், வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.